ஹமாஸ் இயக்கத்தை முடித்துவிடுங்கள் – அமெரிக்காவிலிருந்து செய்தி!

ஹமாஸ் இயக்கத்தை முடித்துவிடுங்கள் – அமெரிக்காவிலிருந்து செய்தி!

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் மூர்க்கமாக போர் நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் இயக்கத்தை முடித்துவிடுங்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்காவில் இருந்து ‘மெசேஜ்’ அனுப்பப்பட்டிருக்கிறது.

இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடக்கும் மோதல் பெரும் போராகவே மாறிவிட்டது. கடந்த சனிக்கிழமை ஹமாஸ் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்தே போய்விட்டன. 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் கை, கால்கள் என உடல் உறுப்புகளை இழந்திருக்கின்றனர்.

உலகிலேயே மிகவும் திறமை வாய்ந்த இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்பை மீறி, ஹமாஸ் படை எப்படி இந்த தாக்குதலை நடத்தியது? என்பது உலக நாடுகளுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில், இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர் மீதும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள அந்த அமைப்பின் நிலைகளின் மீது மூர்க்கமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. நேற்றும், இன்றும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் பாலஸ்தீன அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போர் விமானம், ஹெலிகாப்டர், அதிநவீன ஏவுகணைகளை கொண்டு ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதுங்குகுழிகளை அழிப்பதற்காக மிக சக்திவாய்ந்த வெடிகுண்டுகளும் வானில் இருந்து வீசப்படுவதால் பாலஸ்தீனமே குலுங்கி வருகிறது. காஸா பகுதியே ரத்தக் களறியாக காட்சியளிக்கிறது. இதனிடையே, இந்தப் போரானது இஸ்ரேல், பாலஸ்தீனத்தோடு முடிவடையாது என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தை சாக்காக வைத்து, பாலஸ்தீனத்தை இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், நார்வே, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடியாக தாக்காவிட்டால் கூட, மிக பயங்கர ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அந்நாடுகள் வழங்கும் எனத் தெரிகிறது. அதேபோல, பாலஸ்தீனத்துக்கு கத்தார், சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, ஈரான் போன்ற முஸ்லிம் நாடுகள் ஆதரவு தெரிவித்து வருவதால், இது ஒரு சிறிய உலகப்போராக கூட மாறலாம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, இந்தக் கூற்றை நிரூபிக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹேலி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அவர்களை (ஹமாஸ்) முடித்துவிடுங்கள்” என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை டேக் செய்து கூறியிருக்கிறார் நிக்கி ஹேலி.

முன்னதாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். இன்று இஸ்ரேலுக்கு நடந்தது, நாளை அமெரிக்காவுக்கு நடக்கலாம். ஹமாஸும், அவர்களின் ஆதரவாளர்களும் ஒருகாலத்தில் அமெரிக்காவை அழிக்க வேண்டும் எனக் கூறியவர்கள் தான். எனவே, இந்த தருணத்தில் இஸ்ரேலுக்கு நாம் துணை நிற்க வேண்டும்” என நிக்கி ஹேலி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *