முல்லை நீதிபதி விவகாரம்,அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதற்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம் – ஜோதிலிங்கம்
பல்வேறு அழுத்தம், நிர்பந்தம் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய நீதிபதி சரவணராஜா விவகாரம் அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதற்கு தமிழ் தரப்பிற்க்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் பலத்த அதிர்வுகளை இலங்கையில் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் கௌரவத்தை தலைகீழாகப் புரட்டிய விவகாரம் என்பதால் அரசாங்கம் ஆடிப்போயுள்ளது.
எல்லாவற்றையும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் பொறுப்பில் விட்டு விட்டு அரசாங்கம் ஒதுங்க நினைக்கிறது.
சுயாதீன விசாரணை ஒன்றிற்கு அரசாங்கம் தயாராக இல்லை. சுயாதீன விசாரணை இடம் பெற்றால் அச்சுறுத்தல் இருந்ததா? சட்டமா அதிபர் நீதிமன்றின் கட்டளைகளை வாபஸ் பெறும்படி கேட்டாரா? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி ஏற்படும்.
பாராளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் பகிரங்கமானது. மேன்முறையீடு வழக்குகள் பகிரங்கமானது. இவற்றையெல்லாம் சுயாதீன விசாரணை நடக்கும் போது அரசாங்கத்தினால் மறைக்க முடியாது. சட்டமா அதிபரின் அழுத்தம், பாதுகாப்புக் குறைப்பு, புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்பு என்பன தான் விசாரிக்கப்பட வேண்டிய விடயங்கள் . அவற்றிற்கு போதிய ஆதாரம் இல்லாமல் நீதிபதி சரவணராஜா அதனைக்கூறியிருக்க மாட்டார்.
இந்த அச்சுறுத்தல்கள் தமிழ் நீதிபதிகள் புதிதாக சந்திக்கின்ற விடயமல்ல. ஏற்கனவேயும் பலருக்கு அந்த அனுபவம் உண்டு.
சிறீநிதி நந்தசேகரன் , விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இந்த அனுபவங்கள் கிடைத்தன. இளஞ்செழியனுக்கும் கிடைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் பதவிக்காலத்தின் போது அதனை பெரியளவிற்கு பகிரங்கத்திற்கு கொண்டு வந்து பேசுபொருளாக்கவில்லை.
சரவணராஜா தான் அதனை பேசுபொருளாக்கியுள்ளார். அதற்கான காலமும் சூழலும் அதற்கு பொருத்தமாக இருந்தது.தனது வழக்குகள் தொடர்பாக தானாகவே நீதிபதி சரவணராஜா சட்டமா அதிபரைச் சந்தித்தார் என நீதியமைச்சர் கூறுகின்றார். இங்கு தானாக சென்றாரா? அழைப்பின் பேரில் சென்றாரா? என்பது முக்கியமான விடயமல்ல.
அவை இரண்டாம் பட்சமான விடயங்கள். சட்டமா அதிபர் அழுத்தம் கொடுத்தாரா? இல்லையா என்பது தான் முக்கியமான விடயம். இதற்கு சரியான பதில் இன்னமும் வழங்கப்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரா அச்சுறுத்தல் வந்தால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவர்களை கைது செய்யும் அதிகாரம் நீதிபதிக்கு உண்டு எனக் கூறுகின்றார். இது சிரிப்பிற்கு இடமானதான கருத்து.நீதிபதி என்னதான் கட்டளைகளை விடுத்தாலும் அதனை நடைமுறைப்படுத்துபவர்கள் அரசாங்கத்தின் ஒரு அரங்கமாக உள்ள படையினரே! குருந்தூர் மலை தொடர்பான கட்டளைகளை மீறி விகாரை கட்டிய படையினரிடம் எவ்வாறு இவற்றை எதிர்பார்க்க முடியும்.
இது உண்மையில் சட்டப்பிரச்சினையல்ல அரசியல் பிரச்சினை.இதனை சரியாக புரிந்து கொள்வதற்கு இந்த விவகாரத்தை கோட்பாட்டு ரீதியாக விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.
இலங்கையின் இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பது அழிக்கப்படுவதாகும்.அதாவது தேசத்தை தாங்குகின்ற தூண்களான நிலம், மொழி , பொருளாதாரம், கலாச்சாரம் என்பன அழிக்கப்படுவதாகும்; இதன் உச்ச வடிவமே உயிர் அழிப்பாகும். இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது ஏனையவர்கள் வாழ்ந்து விட்டுப்போகலாம் ஆனால் தங்களைத் தாங்களே ஆளத்தகுதியான ஒரு தேசிய இனமாக இருக்க முடியாது. இதற்காகவே இந்த இன அழிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த இன அழிப்பு என்பது அரசின் செயல்திட்டம். மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களின் செயல்திட்டமல்ல. அரசின் நோக்கங்களை நிறைவேற்றும் கடமையே அரசாங்கங்கள் கொண்டிருப்பதால் எந்த அரசாங்கங்கள் வந்தாலும் இவற்றை மேற்கொள்ளும். அளவு ரீதியில் மட்டும் அரசாங்கங்களுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கலாம்.
குருந்தூர் மலை விவகாரம் அரசின் இன அழிப்புச்செயல் திட்டத்தின் ஒரு பகுதியே.அது ஒரே நேரத்தில் நிலப்பறிப்பு, கலாச்சார அழிப்பு என்கின்ற இரண்டு தாங்கு தூண்களை விழுத்துகின்றது. இந்த இன அழிப்பில் முக்கிய பாத்திரத்தை மேற்கொள்பவர்கள் படையினரே! குருந்தூர் மலையில் விகாரை படையினரரலேயே கட்டப்பட்டது. தையிட்டி விகாரையும் படையினராலேயே கட்டப்பட்டது.
அண்மைக்காலமாக இன அழிப்பின் கருவியாக விகாரைகளே பயன்படுத்தப்படுகின்றன. சிங்களக் குடியேற்றங்களுக்கு ஆரம்பத்திலேயே அதிக ஆட்கள் தேவைப்படும். வாழ்வாதார உதவிகள் தேவைப்படும். எல்லைப்புறங்களில் குடியேறுவதற்கு சிங்கள மக்கள் முன்வருவர். ஏனைய சமூகங்கள் வாழும் பிரதேசங்களின் நடுவில் குடியேற முன்வர மாட்டார்கள்.
இதனால் தான் ஆட்சியாளர்கள் விகாரைகளை தேர்ந்தெடுக்கின்றனர் அதற்கு தொல்லியல் பிரதேசங்கள் அவர்களுக்கு வசதியாகி விட்டது.
எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள மக்களை குடியேற்றுவது அவர்களது இலக்கு. திருகோணமலை நகரக் குடியேற்றங்கள் போன்ற சூழ்நிலையை உருவாக்கலாம் என அவர்கள் கருதலாம்.
போர் வெற்றிக்குப்பின்னர் இந்தக் கட்டமைப்பு சார் இன அழிப்பில் படையினர் தீவிரமாக உள்ளனர். தாம் உயிரைக் கொடுத்து கைப்பற்றிய இடங்களை அரசியல்காரர்கள் அபகரித்துச் செல்ல முடியாது என்ற கருத்தும் அவர்களிடம் உள்ளது. சுருங்கக் கூறின் அரசு படைகள் ஊடாக மேற்கொள்ளும் செயல்திட்டம் என இதனை கூறலாம்.
தொல்லியல் திணைக்களம், வனபரிபாலன திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், பௌத்தசாசன அமைச்சு , பொது நிர்வாக அமைச்சு என்பன படையினரின் செயல்திட்டங்களுக்கு உதவும் கருவிகளே!
இந்த இன அழிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு நீதிபதி சரவணராஜா தடையாக இருக்கின்றார். ஏனைய தழிழ் நீதிபதிகளும் தடைகளை கொடுக்க முன்வருகின்றனர். இதனை நிறுத்தியாக வேண்டும். என்பதற்காகவே நீதிபதி சரவணராஜா குறி வைக்கப்பட்டார்.
இந்த இன அழிப்பு விவகாரத்தை மறைத்து இது பொதுவான நீதித்துறை மீதான தலையீடு என்ற விம்பத்தையே தென்னிலங்கை அரசியல்வாதிகள் மேலே கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
மேற்குலகமும் அதனையே விரும்புகின்றது. தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் இதற்குத்துணை போவது தான் கவலைக்குரிய விடயம்.பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இதனை சிராணி பண்டாரநாயக்காவின் விவகாரத்துடன் ஒப்பிடுகின்றார். அது வேறு. இது வேறு. சிராணி பண்டாரநாயக்காவின் விவகாரத்தில் இன அழிப்பு இருக்கவில்லை. அது ஒரு வகையில் அதிகாரப்பிரச்சினை சுமந்திரனிடமும் இந்தப் பார்வையே உள்ளது.
இந்த விவகாரம் அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதற்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம், தமிழ்த்தரப்பு இதனை கவனமாக பயன்படுத்தத் தவறக்கூடாது. நீதிபதி சரவணராஜா தனது வாழ்க்கையை பணயமாக வைத்து இந்த சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்திருக்கின்றார். தமிழ்த்தரப்பு இதனை கோட்டை விடக்கூடாது.
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க இரண்டு காரணங்களுக்காக இந்த விவகாரத்தில் தப்பியோட முனைவார். ஒன்று இது படையினரால் நகர்த்தப்படுகின்ற செயல்திட்டம். ஜனாதிபதி தனது இருப்பிற்கு படையினரிலேயே தங்கியுள்ளார். எனவே படையினரின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்ய மாட்டார். சர்வதேச அழுத்தங்களில் இருந்து படையினரைக் காப்பாற்றுவதும் ரணில் தான். கோத்தபாயாவை படையினர் கைவிட்டதாலேயே நாட்டைவிட்டு ஓட வேண்டியிருந்தது. அந்நிலை தனக்கு வரக்கூடாது அவர் கவனமாக உள்ளார்.
இரண்டாவது அவரும் ஒரு பெருந் தேசியவாதியே! பெருந் தேசியவாதத்தின் லிபரல் முகம் அவருடையது. கொத்திக்கொள்ளும் பாம்புகளாக இல்லாமல் நக்கிக்கொள்ளும் பாம்புகளாக இருப்பவர். தமிழ் வாக்கு வங்கியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமிழர் விவகாரத்தில் கரிசணை காட்டுவது போல தோற்றம் கொடுக்கின்றாரே தவிர அது உண்மையான தோற்றம் இல்லை. சிங்கள் மக்களுக்கும் நல்ல பிள்ளை தமிழ் மக்களுக்கும் நல்ல பிள்ளை என்ற நிலையை எடுக்க அவர் முற்படுகின்றார்.
நீதிபதி சரவணராஜா பதவி விலகல் தொடர்பாக தமிழ்த்தரப்பின் எதிர்வினைகள் திருப்திகரமாக இருந்தது எனக் கூற முடியாது. தமிழ் சட்டத்தரணிகள் ஒப்பீட்டு ரீதியில் சில முயற்சிகளைச் செய்துள்ளனர். அதுவும் ஓரிரு நாட்கள் தான். முல்லைத்தீவு சட்டத்தரணிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அவர்கள் கடமைகளுக்குச் செல்லும் நிலையே உள்ளது. முல்லைத்தீவு சட்டத்தரணிகள் தனித்து விடப்பட்டுள்ளனர். குறைந்த பட்சம் ஒரு வாரமாவது போராட்டத்தை நடத்தியிருக்கலாம். கொக்குவிலில் நீதி தேவதையை; முன்னால் இருத்தி நீதி கேட்டும் போராட்டத்தை முன்னெடுத்தமை முன்மாதிரியான போராட்ட வடிவமே! முன்னாள் மேஜர் மணிவண்ணனின் கை வண்ணம் இங்கு தெரிகின்றது.
தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து மனிதச்சங்கிலி போராட்டத்தை நடாத்தின. சரியான ஒழுங்குபடுத்தல் இல்லாததினால் மனிதச் சங்கிலி போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது. மருதனார்மடத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது போதிய மக்கள் கூட்டம் இருக்கவில்லை. சிவில் அமைப்புக்களும் போதியளவிற்கு பங்கேற்கவில்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டதாக தெரியவில்லை.
போராட்ட வெளிப்படுத்தலிலும் குறைபாடு இருந்தது. இது ஒரு நீதிப்பிரச்சினை என்பது வெளிப்பட்டதே தவிர இது ஒரு இன அழிப்பு பிரச்சினை என்பது போதியளவிற்கு வெளிப்படுத்தப்படவில்லை. இது இன அழிப்பின் ஒரு பகுதி என்பது தென்னிலங்கை அடையாளம் கண்டதால் அறிக்கைகளுக்கு அப்பால் அவர்களின் எதிர்வினைகள் இருக்கவில்லை.
புலம்பெயர்நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் பேரெழுச்சியைக் கொண்டுவந்திருக்கலாம். இரண்டு தளங்களிலும் போதிய கரிசனைகள் காட்டப்படவில்லை. தாயகத்தில் எழுச்சிகன் இல்லாமல் தமிழ் நாட்டிலும் புலம்பெயர்நாடுகளிலும் எழுச்சிகளை எதிர்பார்க்க முடியாது. வரலாறு சந்தர்ப்பங்களை எப்போதும் தருவதில்லை என்ற உண்மையை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்வது நல்லது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.