முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா இந்நாட்டிலிருந்து வெளியேறிய என்னும் செய்தியானது நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளினை ஏற்படுத்தியுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று(29.09.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சட்டமா அதிபரின் அழுத்தம்
குருந்தூர் மலை வழக்கில் உண்மையினை நிலைநாட்டுவதற்காக நடுநிலையுடனும் நீதியுடனும் வழக்கினை விசாரித்து வந்த நீதிபதி சரவணராஜா தனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியமை என்பது அப்பட்டமாக இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது விழுந்த மற்றுமொரு கரும்புள்ளியாகும்.
குருந்தூர்மலை வழக்கில் தொல்பொருட் பிரதேசத்தில் நீதிமன்ற உத்தரவினை மீறி விகாரை கட்டுமானம் தொல்பொருள் பணிப்பாளரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள என அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கட்டளையாக்கியிருந்தது.
இந்நிலையில் இத் தீர்ப்பினை மாற்றியெழுத சட்டமா அதிபரினால் நீதிபதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது எனும் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருந்தது.