பதவி விலகிய முல்லைத்தீவு நீதிபதி: பதில் வழங்க வேண்டிய நிலையில் ரணில்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகியுள்ளமை நாட்டில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச சட்ட ஆட்சிக்கும் நேரடி சவால் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனது பதவியில் இருந்து விலகியிருந்ததுடன் தான் வகித்து வந்த  பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

உயிர் அச்சுறுத்தல்

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் பதவி விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் நீதிபதி பதவி விலகியமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டு வருவதுடன், மக்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில்,

சட்டத்தின் ஆட்சி என்பது அதிகார பகிர்வு, பொறுப்புக்கூறல் என்பன போன்ற மாற்றுக்கருத்துக்கள் கொண்ட விடயமல்ல.  இங்கே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் உயிருக்கு அச்சுறுத்தல்.  நாட்டில் இருந்த கொஞ்ச நஞ்ச சட்ட ஆட்சிக்கும் நேரடி சவால்.

ஜனாதிபதி ரணில் உடன் நாடு திரும்பி இதற்குப் பதிலளிக்க வேண்டும்.  சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினமும் இதற்கு பதில் வழங்க வேண்டும் என  கேட்டுக் கொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *