பின்னர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சிவாஜிலிங்கம் கூறியதாவது: கடந்த 14-ந் தேதி நான் சென்னை வருகை தந்தேன். சென்னையில் சிகிச்சைக்குப் பின்னர் நெடுமாறன் உள்ளிட்டோரை சந்தித்தேன். 2009-ம் ஆண்டு மே 20-ந் தேதி முதலே இலங்கை ராணுவம் காட்டியது பிரபாகரன் உடலே இல்லை என தொடர்ந்து கூறி வருகிறேன். இப்போதும் அதனையே கூறுகிறேன்.
பிரபாகரன் உடலுக்கு டிஎன்ஏ சோதனை நடத்துங்கள் என அப்போதே கூறினேன். ஆனால் டிஎன்ஏ சோதனை நடத்தவில்லை. பிரபாகரன் மரண சான்றிதழையும் வழங்கவில்லை. மதிவதினியின் சகோதரியை 10 ஆண்டுகளுக்கு முன்னர் நேரில் சந்தித்தேன். அப்போது பிரபாகரன் குடும்பம் முழுவதும் முடிந்துவிடவில்லை. இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என கூறினார். அதாவது பிரபாகரன் குடும்பத்தில் ஒருவரோ அல்லது இருவரோ அல்லது மூவரோ உயிரோடு இருக்கின்றனர்.
எங்களைப் பொறுத்தவரை பழ.நெடுமாறன் உலகத் தமிழர்களின் தலைவர். அவர் தேர்தல் அரசியலில் ஈடுபடாதவர். அவரை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். உலகத் தமிழர் விடுதலையை நோக்கியே அவர்களது செயல் திட்டங்கள் இருக்கின்றன. இவ்வாறு சிவாஜிலிங்கம் கூறினார்.