மத்திய பிரதேசத்தில் லஞ்சப்பணத்தை வாயில் போட்டு விழுங்கிய ஊழியரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் பில்காரியில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் பத்வாரி கஜேந்திர சிங். இவரை சந்தன்சிங் என்பவர் நில பிரச்சினை காரணமாக அணுகினார். அவரிடம் பத்வாரி கஜேந்திர சிங் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள் சொல்லும் வேலையை முடித்து கொடுப்பதாக தெரிவித்தார், ஆனால் லஞ்சம் கொடுக்க சந்தன்சிங் விரும்பவில்லை.
இது தொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்பு பொலிசில் முறைப்பாடு செய்தார். இதையடுத்து பொலிசார் அவரை கையும் , களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.
சம்பவத்தன்று வருவாய் துறை அலுவலகத்துக்கு சென்ற சந்தன்சிங், பத்வாரி கஜேந்திர சிங்கிடம் ரூ. 4500 லஞ்சம் கொடுப்பது போல கொடுத்தார், அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பொலிசார் அவரை கைது செய்ய முயன்றனர். பொலிசாரை பார்த்ததும் பத்வாரி கஜேந்திர சிங் அதிர்ச்சி அடைந்தார். எங்கே தான் ஆதாரத்துடன் சிக்கி கொள்வோமோ என பயந்த அவர் லஞ்சம் வாங்கிய பணத்தை வாயில் போட்டு மென்று விழுங்கினார்
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பொலிசார் அவரை ஒரு தட்டில் வாந்தி எடுக்க வைத்தனர். அதில் அவர் விழுங்கிய பணம் கூழாகி வெளியில் வந்தது. பின்னர் அவரை பொலிசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தற்போது நன்றாக உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.