20 வருடங்களுக்கு பிறகு பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கிய சிங்கப்பூர்

போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிங்கப்பூர் இவ்வாரம் 2 குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது. அதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெண்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படாத நிலையில் தற்போது முதல் முதலாக ஒரு பெண்ணுக்கும் சிங்கப்பூரில் தண்டனை நிறைவேறப் போகிறது.

50 கிராம் ஹெராயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 56 வயது நபர் ஒருவர் சிங்கப்பூரின் சாங்கி சிறையில் நாளை தூக்கிலிடப்பட உள்ளார் என்றும் அதே போன்று 30 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக 2018ல் மரண தண்டனை வழங்கப்பட்ட சாரிதேவி ஜமானி எனும் 45 வயது பெண் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது என மனித உரிமைகள் அமைப்பான டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் (TJC) தெரிவித்துள்ளது.

2004ல் சிங்கப்பூரில் 36 வயதான சிகையலங்கார நிபுணர் யென் மே வோன், போதை பொருள் கடத்தல் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டதற்குப் பிறகு, அந்நாட்டில் தூக்கிலிடப்பட்ட முதல் பெண்மணியாக சாரிதேவி இருப்பார் என்று TJC அமைப்பை சேர்ந்த கோகிலா அண்ணாமலை கூறினார்.

கொலை மற்றும் சில வகையான கடத்தல் உள்ளிட்ட சில குற்றங்களுக்கு சிங்கப்பூர் மரண தண்டனை விதிக்கிறது.

உலகின் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் சிங்கப்பூரில் உள்ளது. 500 கிராமுக்கு மேல் கஞ்சா மற்றும் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தினால் அது கடுங்குற்றமாக கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வழிமுறையை, 2-வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 13 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், நாளை நடைபெறவிருக்கும் மரணதண்டனையை நிறுத்துமாறு சிங்கப்பூர் அரசாங்கத்தை கோரியுள்ளது.

“உலகெங்கிலும் உள்ள நாடுகள் மரண தண்டனையை நீக்கி, போதை பொருள் கடத்தல் குற்றங்களில் கொள்கை சீர்திருத்தங்களை கொண்டு வந்திருந்தாலும், சிங்கப்பூர் எதையும் செய்யவில்லை,” என்று அம்னெஸ்டி அமைப்பின் மரணதண்டனைக்கான வல்லுனர் சியாரா சாங்கியோர்ஜியோ தெரிவித்தார்.

மரண தண்டனை என்பது குற்றத்தைத் தடுக்கும் பயனுள்ள வழிமுறை என்று வலியுறுத்தும் சிங்கப்பூர் இவ்விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மறுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *