வீரத்தேவன்
கனடா
காலத்தின் தேவை,
கடந்த பல தசாப்தங்களாக தமிழர்களை, இலங்கையில் ஆட்சிக்கு வரும் சிங்கள பேரினவாத அரசுகளால் தொடர்ந்து தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
.
சிங்கள பேரினவாதம் மகாவம்சமன அமைப்பில் இருந்து வெளியே வரப்போவதில்லை. அதன் வெளிப்பாடே தொடர்ந்தும் நில அபகரிப்பும், பௌத்த மயமாக்கலும் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கில் சைவத் தலங்களுக்கும், முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் பௌத்த தேரர்களால் இனவாதம் பேசி அச்சுறுத்தப்படுவதுடன், சமநேரத்தில் சைவத் தலங்களுக்கு முன்னால் புத்த விகாரை அமைத்து சிங்களவரை குடியமர்த்தி; அவ்விடத்தில் இருந்து தமிழரை விரட்டி தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.
2009 க்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் இது போன்றவை நடைபெறாமல் தமிழர் நிலங்கள் பாதுகாக்கப்பட்டது. இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மெளனிப்பிற்குபின்னர், தாயகத்தில் உள்ள தமிழ் கட்சிகள் யாவும் செயலிழந்து போய் உள்ளன. தமிழீழ விடுதலைப்புலிகள் தாயகத்தில் இருக்கும் போதுதான் அவர்களின் வழிகாட்டுதலால், தமிழ் கட்சிகளின் செயற்திறனும், அதனால் அவர்களின் பெயர்களும் உச்சரிக்கப்பட்டு வந்தன.
.
.
இன்றைக்கு காலத்தின் தேவையை உணர்ந்து தையிட்டி விகாரை விடயத்தில் சகல தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டத்தை சிறிய அளவில் முன்னெடுத்துள்ளனர். கட்சித் தலைமைகள் பலர் வராவிட்டாலும், அவர்களின் கட்சி சார்பாக பலர் கலந்து கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் இரண்டு பேரில் தொடங்கி ஐந்து பேர் ஆகி இன்றைக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
.
பௌத்த மயமாக்கலையும், நில அபகரிப்பையும் தடுப்பதற்கு; நாம் அனைவரும் கட்சி முரண்பாடுகளை ஒதுக்கி விட்டு அனைத்துக் கட்சிகளும், வெகுஜன அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், ஊர்ச் சங்கங்கள், இந்துக்குருமார் சங்கங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாகதோர் போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் சர்வதேசக் கவனத்தை திருப்பி, தேசிய மக்கள் சக்தி அரசின் உண்மை முகத்தை உலகுக்கு வெளிப்படுத்தி, இவ் ஆக்கிரமிப்புக்களை தடுக்க முடியும்.
.
வரும் காலங்களில் தொடர்ந்தும் நாங்கள் மௌனமாக இருந்து தனிப்பட்ட விரோதங்களுக்கும், பதவி ஆசைகளுக்கும் உட்படுவோமாக இருந்தால் நாங்கள் தொடர்ந்தும் அடிமை வாழ்க்கை வாழ வேண்டி வரும் எனவே காலத்தின் தேவையை உணர்ந்து செயற்படுமாறு வேண்டுகின்றோம்.