நிரு – பிரித்தானியா
புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் அமைப்புக்கள் செய்யும் வேலைகள் .
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் புலம் பெயர் தேசங்களில் வாழும் முன்னாள் போராளிகள் தாம் இயங்கிய படைப் பிரிவுகளின் பெயர்களில் குழுக்களை அமைத்து உள்ளது யாவரும் அறிந்ததே. விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியாக சர்வதேசம் ஏற்றுக் கொண்ட ஜனநாயக வழியிலான முன்னெடுப்புக்களை செய்கிறோம் என்ற பெயரில் தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் , கலை நிகழ்வுகள் செய்து வருகின்றார்கள். இதன் நோக்கம் பற்றி கேட்டால் தமிழ் மரபுவழி கலை கலாச்சாரத்தை வளர்க்கின்றோம் என்கின்றனர்.
தாயகத்தில் உள்ள இளையோர் கலாச்சார சீர்கேடுகளிலாலும் போதை வஸ்து பாவனையாலும் தம்மை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இதிலிருந்து மீட்கும் வேலைத்திட்டங்கள், மற்றும் அரசியல் நகர்வுகள் என்று செய்ய வேண்டியவை இருக்கின்றது. விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்வுகள் செய்வதற்கு ஊர்ச்சங்கங்கள், விளையாட்டு கழகங்கள் இருக்கின்றது. ஊர்ச்சங்கங்கள், விளையாட்டு கழகங்கள் பார்க்க வேண்டிய வேலையை சில அமைப்புக்கள் செய்வதன் மூலம் இவர்கள் இன்னும் குறுகிய வட்டத்திற்குள் நிற்பதையே காட்டுகின்றது. புலம்பெயர் தேசங்களில் கலை கலாச்சாரங்களை நிமித்தி என்ன செய்யப் போகின்றார்கள். இவர்களால் புலம்பெயர் தேசத்திலும் தாயகத்திலும் நடக்கும் நட்சத்திர கலை விழாக்களையாவது நிறுத்த முடிந்ததா?
இற்றை வரை ஐ.நா வில் தமிழர் தரப்பிற்கு எதிரான முறைப்பாடுகள் 3650 மேற்பட்டவை இலங்கை அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக 365 முறைப்பாடுகள் கூட தமிழர் தரப்பால் பதிவு செய்யப்படவில்லை. ஐ.நா வேலைத் திட்டமென்று கடந்த 15 வருடங்களிற்கு மேலாக இயங்கிவரும் அமைப்புக்களும், ஐ.நா வேலைத் திட்டமென்று தனிப்பட்ட முறையில் நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வருபவர்களும் இதுவரை சேகரித்த தரவுகள் எங்கே? இவர்களும் தமிழ் அரசியல்வாதிகள் போல மக்களை ஏமாற்றுகிறார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவர்கள் தம்மை திருத்தி முதன்மையாக செய்யப்பட வேண்டிய விடயங்களிற்கு முன்னுரிமை கொடுத்து செயற்படத் தவறுவார்களாக இருந்தால் தமிழீழத் தேசியத் தலைவர் வழிகாட்டலில் தமிழீழ கனவுடன்
தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்கள் மற்றும் மக்களிற்கு செய்யும் துரோகமாகவே பார்க்கப்படும்..