கனடாவில் ஐயப்பன் இந்து ஆலயம் முன்வைத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமான தீர்ப்பு.

கனடாவில் ஐயப்பன் இந்து ஆலயம் முன்வைத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமான தீர்ப்பு.

கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம் ( ஒன்றாறியோ ஸ்ரீ ஐயப்பன்- Sri Ayyappa Samajam of Ontario ) கார்த்திக் நந்தகுமாருக்கு எதிராக முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் கார்த்திக் நந்தகுமாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.Ontario மாகாண உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
கார்த்திகை 2021 மாவீரர் வாரத்தில் கார்த்திக் நந்தகுமார் பெருமளவில் கார்த்திகைப் பூக்களை இறக்குமதி செய்து, அவற்றைக் கொண்டு ஒரு பிரமாண்டமான கார்த்திகைப் பூ வடிவில் வடிவமைத்து ஐயப்பன் ஆலயத்தில் கொடுத்து அதனை வைத்து சுவாமி ஐயப்பனிற்கு அலங்காரம் செய்யுமாறு ஆலய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இதனை ஆலய நிர்வாகத்தில் தமிழர் தேசியத்துக்கு எதிராக  அந்நிய சக்திகளோடு இயங்கும் ஒரு சிலர் மறுத்ததோடு அலங்காரத்தை குப்பை என்று கூறி தூக்கி வீசினர். மேலும் தாங்கள் இவ்விடயத்தினை அனுமதித்தால் இலங்கை உயர்ஸ்தானிகருக்கு எவ்வாறு பதிலளிப்பது எனவும் கேட்டு மறுத்தனர்.
இந்த நிகழ்வை பார்த்து கொண்டிருந்த பக்தர்கள் இதனைப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதன் மூலம் இவ்விடயமானது ஒரு பெரும் பேசுபொருளாகி  அந்தக் கால கட்டத்தில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிகழ்வு மற்றும், இது தொடர்பாக கார்த்திக் வெளியிட்ட தன்னிலை விளக்க முகநூல் நேரலை பதிவுகள் ஏற்படுத்திய அதிர்வலைகள் உலகம் முழுக்க பரந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பல தமிழ் தேசிய ஆதரவாளர்களின் மனதை உலுக்கி இருந்தமை அந்த நேரங்களில் சமூக வலைத்தளங்களில் வந்த பதிவுகள் மூலம் அறியக் கூடியதாகவிருந்தது.
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் காலப்பகுதியில் தமிழ் இளையோர் மற்றும் தமிழ் சமூக அங்கத்தவர்களினால் ஆலய முன்றலில் ஆலயத்தின் நிர்வாக சபையின் அங்கத்தவர்களும் இலங்கை இனப்படுகொலை அரசுக்கு ஆதரவாக செயற்படுபவர்களாக கருத்தப்பட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக இரண்டு நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டு மகஜர் ஒன்றும் சமர்ப்பிக்கப் பட்டது. அந்த மகஜரில் ஆலயத்தின் போக்கை கண்டித்தும், அவர்கள் இலங்கை தூதருடன் கொண்டிருக்கும் மறைமுக உறவினை கண்டித்தும் கருத்துக்கள் பகிரப்பட்டு இருந்தன.
ஆயினும், ஆலய நிர்வாகம் அவர்களின் மகஜரை ஏற்க மறுத்தது மட்டுமல்லாது , அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதும் குண்டர்களைக் கொண்டு தாக்குதல் நடாத்திய வீடியோக்களும் வெளிவந்து சமூகத்தில் ஆலய நிர்வாகம் மீது மிகப் பெரும் அதிருப்தியை உண்டுபண்ணியது.
இவர்களின் இச் செயலால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் தொகை கணிசமாக குறைவடைந்த்தோடு பலரின் எதிர்ப்புக்கு உள்ளாகியது.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் வெளியிட்ட  வீடியோ பதிவுகளினால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறியும், ஆலயமானது, அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்குவதாகவும் கார்த்திக் விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஆலயத்துக்குள் புகுத்த நினைப்பதாகவும், இறந்த தீவிரவாதிகளுக்கு வைக்கும் பூவினை ஆலயத்துக்கு கொண்டுவந்து ஆலயத்தின் புனிதத்தினை கெடுத்து விட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது,
தனக்கு எதிரான ஐயப்பன் இந்து ஆலய சட்ட நடவடிக்கையை நிராகரிக்க வேண்டியும், தனது பேச்சு சுதந்திரத்தை ஆலய நிர்வாகம் சட்ட நடவடிக்கை மூலம் தடுத்துள்ளதாகவும்  பிரதிவாதி கார்த்திக் நீதிமன்றத்தை நாடினார்.
விசாரணையின் போது, கார்த்திக் நந்தகுமார் அவர்களின் தேசியம் தொடர்பான செயற்பாடுகளை சுட்டிக்காட்டியும், அவரின் தனிப்பட்ட வாழ்வியலை காரணம் காட்டியும், குறிப்பாக, அவர் தலைவர் பிரபாகரனை முன்னிலைப் படுத்தி திருமணம் செய்தமை மற்றும் அவரின் உருவம் தாங்கிய தாலியை அணிவித்தமை, பிள்ளைகளுக்கு, தீரன்பிரபாகரன், நந்திக்கடலோன் என்று பெயர் சூட்டியமை மற்றும் அவரின் வியாபார நிறுவனத்தின் வெளிப்புறத்தில் கார்த்திகை பூக்களின் படங்களை வைத்திருந்தமை என பல தகவல்கள் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு கார்த்திக் நந்தகுமார் புலிகளை மீளுருவாக்கம் செய்கிறார் என ஐயப்பன் ஆலய நிர்வாகத்தின் சார்பாக குற்றம் சாட்டப் பட்டது.
கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கு கடந்ந 16.01.2024 இறுதிக்கட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது, இவ்விசாரணையின்போது Zoom  இணைய வழியாக மக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தனர், இதில் பல மக்களும் ஊடகங்களும் உன்னிப்பாக கவனித்தனர். இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு 29.01.2024 அன்று வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதி J.T. Akbarali J. தனது தீர்ப்பில்,  தனது கருத்துப்படி ஐயப்பன் ஆலயம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையை பிரிவு  137.1 of the Courts of Justice Act படி தள்ளுபடி செய்வதாக அறிவித்ததோடு, இந்த வழக்கில் பிரதிவாதி பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார் எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிபதி மேலும் தெரிவிக்கையில், ஆலயத்தின் பண மேலாண்மை தொடர்பாக கார்த்திக் வைத்த குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை உள்ளவையாக இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் கார்த்திக் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆலயத்தில் பல ஆயிரம் டாலர் மோசடிகள் நடந்திருப்பதை ஆலயத்தின் சட்டத்தரணி ஒத்துக் கொண்டிருப்பதாகவும் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
மேலும், ஆலயம் கார்த்திக்கின் விடீயோக்களினால் தமக்கு ஏற்பட்ட நட்டத்தினை தெளிவுபடுத்த தவறியுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பிரிவு 137.1 கீழ் , சமூக அக்கறையுடைய அங்கத்தவர்களை அவர்களுக்கு எதிரான நிறுவனங்கள் சட்ட நடவடிக்கைகள்  கொண்டுவருவதன் மூலம் அவர்கள் சமூகத்துக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்வை தடுப்பது உகந்தது அல்ல எனவும், இந்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி கார்த்திக் நந்தகுமாரின் முமு இழப்பீட்டுத்  தொகையாக $ 73.769.12 கனேடியன் டாலர் ஐ முப்பது நாட்களுக்குள் ஐயப்பன் இந்து ஆலயம் செலுத்த வேண்டுமெனவும் தனது தீர்ப்பில் நீதிபதி JT Akbarali கூறியுள்ளார்.
இவ் வழக்கை அவதானித்து வந்த பக்தர்களும் பொது மக்கள் பலரும் கருத்து தெரிவிக்கையில் ஆலய நிர்வாகத்தை கண்டித்ததோடு, கனேடிய அரசில் ஒரு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட  ஆலயம், கனடிய அரசு சமூக மேம்பாட்டுக்காக வழங்கும் நிதியையும், மக்களின் நன்கொடைப் பணத்தையும்,  இனப்படுகொலை அரசினை திருப்திப் படுத்த பயன்படுத்துவதாக விசனம் தெரிவித்துள்ளனர் .
மேலும், தற்போதைய நிர்வாகத்தினர் வெளியேற்றப்பட்டு, புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காந்தள் பூ (கார்த்திகை பூ) தமிழீழத்தின் தேசிய மலர், அதனை வீசி எறிவது என்பது எமது இனத்தையே அவமதிப்பதற்கு சமம், தேசிய மலரை வீசி எறிந்ததன் விளைவே இன்றைக்கு இவர்களை இங்கே கொண்டுவந்துள்ளது,  இவர்களிற்கு மன்னிப்பே கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை பூவை வழிபாட்டிற்க்கு வைக்கக்கூடாது என்று எந்த வேதத்திலும் சொல்லப்படவில்லை, அதுமட்டுமன்றி, சைவத் தமிழ் பதிகங்களில் தமிழ் கடவுள் முருகனுக்கும், கொற்றவை எனப்படும் காளி மற்றும், சிவனுக்கும் உரிய மலர் இதுவென கூறப்பட்டுள்ளது.ஆறுமுக நாவலர் தனது புட்ப விதிகள் எனும் நூலில், செங்காந்தள் மலரை இறைவனுக்கு உகந்த மலராக பதிவு செய்துள்ளார்.

கார்த்திகை மாதத்தில் இனத்தின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களின் வணக்க நிகழ்விற்கு விசேடமாக  தேசிய மலரான கார்த்திகை பூ வைத்து வணக்க நிகழ்வு பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது யாவரும் அறிந்ததே, இதனை அவமதிப்பவர்கள் தழிழர்களின் துரோகிகளாகவே பார்க்கப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *