தேசத்தின் பார்வையில் ஓர் அலசல் –
நீதன் ( த.செ )
இன்று நாம் எல்லோரும் காலத்தின் தேவையை அறியாமல் போலியாக எல்லோருடைய நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருக்கிறோம்,
தேசியம் பற்றியும் போராட்டம் பற்றியும் you tube, Tiktok, Google இணையத்தளம் மற்றும் பத்திரிகை மூலம் பலரின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வருகிறது. இதனால் சாதித்தது எதுவும் இல்லை, தேவையற்ற விடயங்களுக்கும், விதண்டவாதங்களுக்கும் எதிர்வினையாக ஏதாவது செய்து கொண்டு இருக்கிறோம்.
எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எங்களிடம் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் கூறிய விடயங்களில் ஏதாவது பின்பற்றப்பட்டுள்ளதா? என்றால் எதுவும் இல்லை! தங்கை துவாரகா என போலியாக ஒருவர் கொண்டுவரப்பட்டார்! அவர் போலியென அடையாளம் காணப்பட்டு அந்த விடயம், அவர் சார்ந்த நபர்களும் தூக்கியெறியப்பட்டுள்ள நிலையில்; இதற்கு பின்னரும் தொடர்ந்து உண்மையின் தருசனமாக முன்னாள் போராளிகள் பேசிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது. இவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பு இயக்க மரபை சில நேரம் மறந்து பேசலாம். இவர்கள் இற்றைவரை என்ன செய்கின்றார்கள்? போலி தேசியவாதிகளை அகற்றி போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு ஏன் கொண்டு செல்லவில்லை. மக்களுக்கு நம்பிக்கையை ஏன் கொடுக்கவில்லை? இதற்காகவா நீங்கள் யுத்த வலயத்தில் இருந்து தப்பி வந்தீர்கள்! உங்களது கடமைகளை மறந்து செயற்படுவதாகவே தெரிகின்றது.
சவாலான விடயங்களை உண்மையோ போலியோ என நிரூபித்துவிட்டு மற்றைய வேலைத்திட்டங்களில் நேரத்தை செலவிடுவதுதான் நல்லது, தமிழீழ தேசியத்தலைவர் பற்றியோ, அவரின் குடும்பம் பற்றியோ, அவர்களின் இருப்பு பற்றியோ, பேசுவதற்கு யாருக்கும் தெளிவோ தகுதியோ இல்லை! இதை நீங்கள் கடந்து போவதுதான் நல்லது.
போராளிகள் தளபதிமார்களை மதிக்கின்றோம். ஒவ்வொருவருடைய தியாகங்களிற்கும் தலைவணங்குகிறோம், இதுவரை இணையத்தளங்கள் வாயிலாக பேசிய போராளிகள், தளபதிகள் யாருமே கடைசி நேரம்வரை நேரடியாக தலைவருடன் தொடர்பில் இருந்ததாக கூறவில்லை, கடைசி நேரம் வரையில் தொடர்பில் இருந்தவர்கள் பலர் புலம் பெயர் தேசங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள், இயக்க மரபுக்கு அமைவாக இரகசிய காப்பை அமைதியாக கடைப்பிடித்தபடி இருக்கிறார்கள். இன்று இணையத்தினுடாக புலம் பெயர் தேசங்களில் இருந்து அறிக்கை விடும் போராட்டத்தை பாதியில் கைவிட்டு வந்த முன்னாள் போராளிகளும் இன்று தலைவரின் குடும்பம் பற்றி கதைக்கிறார்கள்.2009 ற்கு பின் வந்த போராளிகளும் தளபதிமாரும் 17.05.2009 இற்கு பின்னர் எப்படி புலம்பெயர் தேசங்களிற்கு வந்தார்கள்? இயக்கத்திற்கு கஞ்சி கொடுத்தவர்களே நாட்டை விட்டு வெளியே போவதற்கு தடை, இவர்கள் இராணுவத்திடம் சரணடையாமல் பிடிபடாமல் வருவதற்கு வழியிருந்தால் இவர்களிற்கு பாடம் கற்பித்த ஆசான் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு போக எவ்வளவு சிந்திப்பார்?
தளங்களில் வரும் போராளிகள் உள்வீட்டு இரகசியங்களை எதிரிக்கு எடுத்துக்கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், உதாரணமாக சொல்லப்போனல் விடுதலைப்புலிகள் அமைப்பில் உள்ள சிறப்பு படையணிகள், சிறப்பு நடவடிக்கைகள் பற்றி பொது வெளியில் பேசுவதால் இன்று தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பல போராளிகள் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப் பட்டுள்ளார்கள்.
புலம் பெயர் தேசங்களில் இருந்து அறிக்கை விடுபவர்கள் இன்றும் அச்சத்தின் மத்தியில் தாயகத்தில் வாழும் சக போராளிகளைப்பற்றியும் சற்று சிந்திக்க வேண்டும்.
எப்படியோ புலம்பெயர் தேசத்திற்கு வந்து விட்டோம், கடந்த 14 வருடங்களாக நாம் என்ன செய்திருக்கிறோம் ? தேசத்தின்பால் கொள்கை கோட்பாட்டுடன் பயணிக்கும் அமைப்புக்கள் ஆக்கபூர்வமாக ஒவ்வொரு வேலைத்திட்டத்தை ஒவ்வொரு அமைப்பு எடுத்து செய்திருந்தாலே நாம் எவ்வளவோ சாதித்திருக்கலாம். இன்னும் காலம் கடந்து போகவில்லை, இனியாவது போட்டி பொறாமையை விட்டு ஒற்றுமையாக பயணிக்க வேண்டுமென்பதுதான் மக்களின் கருத்தாகவும், உங்களுடன் களமாடிய மாவீரர்களுக்கு நீங்கள் செலுத்தும் மரியாதையாக பார்க்கபடுகிறது!
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!